"டியர் ரதி" திரைப்பட விமர்சனம்
இயக்குனர் பிரவீன் கே.மணி இயக்கிய "டியர் ரவி" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;
சென்னை,
சரவணா விக்ரமுக்கு பெண்கள் என்றால் சிறுவயது முதலே ‘அலர்ஜி'. பெண்களிடம் பேசினால் பயமும், பதற்றமும் வந்துவிடுகிறது. இந்த பயத்தை போக்கும் ‘நல்ல எண்ணத்தில்' அவரை பாலியல் தொழிலாளியிடம் அழைத்து செல்கிறார் அவரது நண்பர்.
அங்கு பாலியல் தொழிலாளியான ஹஸ்லி அமானை பார்த்ததும் சரவணா விக்ரமுக்கு பரவசம் வந்துவிடுகிறது. அவருடன் ஒருநாள் முழுவதும் செலவிட விரும்புகிறார். ஹஸ்லி அமானும் இதற்கு ஒத்துக்கொள்ள இருவரும் ‘டேட்டிங்' செல்கிறார்கள்.
இதற்கிடையில் ஹஸ்லி அமானை ஒரு பெரும் கூட்டம் துரத்துகிறது. அவர்கள் ஏன் ஹஸ்லி அமானை துரத்த வேண்டும்? அவரது பின்னணி என்ன? சரவணா விக்ரமின் பயம் தீர்ந்ததா? என்பதே மீதி கதை.
சின்னத்திரையில் நடித்த அனுபவத்துடன் சிட்டாக பறந்து வந்திருக்கும் சரவணா விக்ரம் நடிப்பில் முதலுக்கு மோசமில்லை. ஓரிரு இடங்களில் தடுமாறியிருந்தாலும், ‘மற்றதெல்லாம்' சரியாக செய்கிறார். எளிமையான அழகால் கவரும் ஹஸ்லி அமான், கொடுத்த கதாபாத்திரத்துக்கு குறைவில்லாமல் நடித்துள்ளார்.
வில்லன் ராஜேஷ் பாலச்சந்திரன் தனது குழுவினருடன் செய்யும் காமெடி அபாரம். ஆனால் சிரிப்புதான் வர மறுக்கிறது. சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியன், சரவணன் பழனிசாமி தமிழ்செல்வன், பசுபதி ஆகியோரின் நடிப்பில் குறைவில்லை.
லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசனை. எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசை ஓகே ரகம். இளமையான, புதுமையான காட்சிகள் பலம் என்றாலும், திரைக்கதையில் தடுமாறி விட்டார்கள். யாருக்காக, எதற்காக பேசுகிறோம்? என்பதே தெரியாமல் படம் முழுக்க பேசிக்கொண்டே இருந்தால் எப்படி? காதலையும், காமத்தையும் முடிச்சு போட்டு சொல்லும் கருத்துகளை அனைவராலும் ஏற்கமுடியாது அல்லவா? சாலை நேராக இருக்க ‘ஸ்கிட்' அடிப்பது அவசியமா?
சூழ்நிலையே எல்லாவற்றுக்கும் காரணம் என்ற எதார்த்தத்தை, ஒரு காதல் படைப்பாக சொல்லியிருக்கிறார், இயக்குனர் பிரவீன் கே.மணி. புரியாத கணக்கை புதிர் என நினைக்க வேண்டாமே...
டியர் ரதி - ஆறிப்போன காபி.