"சல்லியர்கள்" திரைப்பட விமர்சனம்
இயக்குனர் கிட்டு இயக்கிய சல்லியர்கள் படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;
சென்னை,
இலங்கையில் சிங்களப் பிரதேசத்துக்கும், தமிழ் பிரதேசத்துக்கும் இடையே போர் மூழ்கிறது. இதில் போராட்டக்காரர்கள் சார்பில் பதுங்கு குழிகளில் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டாக்டர்களாக சத்யாதேவியும், மகேந்திரனும் மருத்துவ தர்மத்தின்படி பணியாற்றுகிறார்கள். ராணுவ வீரரே காயமடைந்து வந்தாலும், அவர்களது உயிரையும் காப்பாற்றுகிறார்கள்.
இதற்கிடையில் பதுங்கு குழிகளில் செயல்படும் மருத்துவ சிகிச்சை மையங்களை வெடிகுண்டு வீசி தகர்க்க ராணுவம் முடிவு செய்கிறது. இதில் டாக்டர்கள் தப்பித்தார்களா, இல்லையா? அடுத்து என்ன ஆனது? என்பதே படத்தின் பரபரப்பான மீதி கதை.
படத்தின் முதுகெலும்பாக வரும் சத்யாதேவி, ‘இப்படியும் நடிக்க முடியுமா?' என வியக்க வைக்கிறார். கண்களிலேயே வசனம் பேசுகிறார். வலி நிறைந்த அவரது ‘பிளாஷ்பேக்' காட்சிகள் உணர்ச்சி பிழம்பு. மகேந்திரன் நடிப்பும் கவனிக்க வைக்கிறது.சில காட்சிகளே வந்தாலும், கருணாசின் நடிப்பு ‘அடடா' சொல்ல வைக்கிறது.
‘தலைகுனிந்து சாகாதே...' என உயிர்போகும் தருணத்தில் தனது மகனிடம் அவர் சொல்லுமிடம் நெகிழ்ச்சி. கண்ணீரை வரவழைச்சுட்டீங்களே... கருணாஸ். திருமுருகன், சந்தோஷ், மோகன் உள்ளிட்டோரின் நடிப்பு நிறைவு. நாகராஜ் - பிரியாலயா காதல் காட்சிகளும் ரசிப்பு.சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவும், கென் கருணாஸ் - ஈஸ்வர் கூட்டணி இசையும் படத்தின் பரபரப்புக்கு துணை நிற்கிறது. கவிஞர் வைரமுத்து வரிகளில் ‘மலரே மலரே...', ‘தாயே...' பாடல்கள் மீண்டும் கேட்கும் ரகம்.
பரபரப்பான திரைக்கதை படத்துக்கு பலம். சில காட்சிகளை யூகிக்க முடிகிறது. இலங்கை போரையும், போராட்டக் களத்தையும் தாண்டி, அங்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வந்த ‘சல்லியர்கள்' என்ற போராட்டக்காரர்களின் வாழ்க்கையை உருக்கமாய் சொல்லி ஈர்க்க வைத்துள்ளார், இயக்குனர் கிட்டு.
சல்லியர்கள் - உணர்ச்சி பிழம்பு.