கட்டுக்கடங்காமல் திரண்ட ரசிகர்கள் - அர்ஜென்டினா அணியின் வெற்றி ஊர்வலம் பாதியில் நிறுத்தம்

ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் அர்ஜென்டினா அணியின் திறந்தவெளி பஸ் ஊர்வலம் பாதியில் கைவிடப்பட்டது.

Update: 2022-12-22 00:34 GMT

Image Courtesy : @Argentina twitter

பியூனஸ் அயர்ஸ்,

கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை தோற்கடித்து 3-வது முறையாக மகுடம் சூடியது. 1986-ம் ஆண்டுக்கு பிறகு அர்ஜென்டினா உச்சிமுகர்ந்த முதல் உலகக் கோப்பை இது தான். அத்துடன் கால்பந்து உலகின் சூப்பர்ஸ்டாரும், அர்ஜென்டினா கேப்டனுமான லயோனல் மெஸ்சி முதல்முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்திய பொன்னான தருணமும் இது தான்.

கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா அணி வீரர்கள் நேற்று முன்தினம் அதிகாலை தாயகம் திரும்பினர். அந்த நேரத்திலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாகமான வரவேற்பு அளித்தனர். வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்துக்கு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சில மணிநேரம் வீரர்கள், பயிற்சி குழுவினர் ஓய்வு எடுத்தனர்.

அதன் பிறகு பகலில் அங்கிருந்து தலைநகர் பியூனஸ் அயர்சின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வரலாற்று நினைவு சின்னத்துக்கு வீரர்களை திறந்த வெளி பஸ்சில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரம் ரசிகர்கள் வெள்ளத்தில் ஊர்ந்து சென்று பிரமாண்டமான ஒரு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பது திட்டம். அதற்கு ஏற்ப அங்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் நகரின் பல்வேறு இடங்களில் ஆட்டம், பாட்டம், குதூகலத்துடன் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

ஆனால் அர்ஜென்டினா அணியின் வெற்றி கொண்டாட்டத்திற்கான திறந்தவெளி பஸ் பயணத்தை முழுமை செய்ய முடியவில்லை. காரணம் அந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. பஸ் நகர முடியாத அளவுக்கு ஆர்வமிகுதியில் முண்டியடித்தனர். பாலத்தின் அருகே பஸ் கடந்த போது சில ரசிகர்கள் பாலத்தில் இருந்து பஸ்சில் குதித்த விபரீத சம்பவங்களும் அரங்கேறின. ஏறக்குறைய 40-50 லட்சம் ரசிகர்களின் படையெடுப்பால் தலைநகரமே குலுங்கிப் போனதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு கட்டத்தில் போலீசாரால் நிலைமையை சமாளிக்க முடியாமல் போனதால், அசம்பாவிதத்தை தவிர்க்கும் பொருட்டு அர்ஜென்டினா அணியினரின் திறந்தவெளி பஸ் பயணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மெஸ்சி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஹெலிகாப்டரில் அழைத்து செல்லப்பட்டனர். பிறகு வான் வழியாக ரசிகர்களின் அன்பையும், ஆர்ப்பரிப்பையும் ஏற்றுக் கொண்டனர். ஆனாலும் தங்களது ஹீரோக்களை அருகில் பார்க்க முடியாத ஏக்கத்துடன் பல ரசிகர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்