சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம், வெள்ளி விலை: திடீர் குறைவுக்கு என்ன காரணம்..?

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி இருந்தது.;

Update:2026-01-22 09:42 IST

சென்னை,

தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த 13-ந் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை கடந்த நிலையில், நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. இந்த சூழலில் கடந்த 3 தினங்களாக அதன் ஏற்றம் படுவேகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதிலும் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை காலை மற்றும் பிற்பகல் என 2 முறை மாற்றம் கண்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 அதிகரித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலையில் பெரிய ஏற்றம் இருந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்கப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.350-ம், சவரனுக்கு ரூ.2,800-ம் அதிகரித்திருந்த நிலையில், பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.515-ம், சவரனுக்கு ரூ.4,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,415-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது.

கடந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.1,135-ம், சவரனுக்கு ரூ.9 ஆயிரத்து 80-ம் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. இது ஒரு பக்கம் தாக்கத்தை ஏற்படுத்த, வெள்ளி விலையும் மறுபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதுவும் விண்ணை முட்டும் அளவுக்கு எகிறுகிறது. நேற்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.345-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.215 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ. 5,000 குறைந்து, ரூ.3,40,000-க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.340-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திடீர் குறைவுக்கு என்ன காரணம்?

தங்கம் விலையின் இந்த போக்குக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே கிரீன்லாந்து விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் வர்த்தகப் போர், அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி தொடர்பான அரசியல் தலையீடுகள் மற்றும் உலகளாவிய பணவீக்க பயம், பங்கு சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டில் சற்று தயக்கம் காட்டுவதன் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்களும், வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய வேகமான ஏற்றத்துக்கு பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கங்கள் அதிகமாக இருக்கலாம் என்றும், அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்றும் வியாபாரிகள் கணிக்கின்றனர்.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

22.01.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600

21.01.2026 - ஒரு சவரன் ரூ.1,15,320

20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,11,200

19.01.2026 - ஒரு சவரன் ரூ.1,07,600

18.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240

17.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240


Tags:    

மேலும் செய்திகள்