நாளை பம்பையில் நடைபெறுகிறது அய்யப்ப பக்தர்கள் சங்கமம்: தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு

நாளை (சனிக்கிழமை) நடைபெறும் சர்வதேச அய்யப்ப பக்தர்கள் சங்கமம் விழாவை முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்.;

Update:2025-09-19 12:51 IST

கோப்புப்படம்

திருவனந்தபுரம்,

சபரிமலையில் நேற்று கேரள தேவஸ்தான துறை மந்திரி வாசவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சர்வதேச அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தை நடத்த பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள், தடைகள் வந்தன. அவை அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால் உடைத்தெறியப்பட்டுள்ளது. 20-ந் தேதி (நாளை) நடைபெற இருக்கும் சர்வதேச அய்யப்ப பக்தர்கள் சங்கமத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

இந்த சங்கமத்திற்கு ரூ.7 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஆதாரங்கள் நன்கொடை மூலம் சேகரிக்கப்படும். இதனால் அரசுக்கோ, தேவஸ்தானத்திற்கோ எந்த இழப்பும் இல்லை. அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் பங்கேற்க சுமார் 4,800 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதில் 3 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த சங்கமம் 3 அமர்வுகளாக நடத்தப்படுகிறது. அதற்கான பிரமாண்ட பந்தல் போடப்பட்டு உள்ளது.

முதல் அமர்வில், சபரிமலை மாஸ்டர் செயல் திட்டம் குறித்தும், 2-வது அமர்வில் சபரிமலை ஆன்மிக சுற்றுலா, 3-வது அமர்வில் சபரிமலையில் பக்தர்களின் கூட்ட நெரிசல் குறித்து விவாதிக்கப்படும். இந்த சங்கமத்தின் வழியாக சபரிமலையில் ரூ.1,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளுக்கு திட்டம் வகுக்கப்பட உள்ளது.

சர்வதேச அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தை 20-ந் தேதி காலை 10.30 மணிக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். எனது தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன், கேரள மந்திரிகள் ராஜன், கிருஷ்ணன் குட்டி, சசீந்திரன், ரோஷி அகஸ்டின், கணேஷ் குமார், சஜி செரியான், வீணா ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மாலை 4 மணிக்கு சங்கம நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். இதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்கள் சபரிமலை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்