சண்டே ஸ்பெஷல் : 20 வகையான காய்கறிகளுடன் பொங்கல் கதம்ப குழம்பு செய்வது எப்படி?

பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் இந்த வாரம் பொங்கல் கதம்ப குழம்பு செய்வது எப்படி? என்பதை பற்றி பார்க்கலாம்.;

Update:2026-01-11 03:26 IST

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இடைவெளி உள்ளது. எனவே, இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் 20 வகையான காய்கறிகளுடன் உடலுக்கு சத்தான, நாவிற்கு சுவையான பொங்கல் கதம்ப குழம்பு எப்படி செய்வது? என்பதை பார்க்கப்போகிறோம்.

தேவையான பொருட்கள்

புடலங்காய் - 1

வாழைக்காய் - 2

கத்தரிக்காய் - 3

தக்காளி - 4

பீன்ஸ் - 8

கேரட் - 2

மிளகாய் - 6

மாங்காய் - 1 (சிறியது)

பூசணிக்காய் - சிறிய துண்டு

வெண்பூசணி -சிறிய துண்டு

அவரைக்காய் - 5

சவ்சவ் -1

காளிபிளவர் - சிறியது

பெரிய வெங்காயம் -2

சின்னவெங்காயம் - 200 கிராம்

சேனைக்கிழங்கு - ¼ கிலோ

கருணைக்கிழக்கு - 1

சேம்பங்கிழங்கு - 5

சிறுகிழங்கு - 7

உருளைக்கிழங்கு - 2

கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு

கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

தேங்காய் - அரை முறி (துருவி எடுத்துக்கொள்ளவும்)

புளி - 100 கிராம்

துவரம் பருப்பு - 200 கிராம்

கடலை பருப்பு - 50 கிராம்

மஞ்சள் தூள் - சிறிதளவு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

மசாலா தயாரிக்க..

காய்ந்த மிளகாய் வத்தல் - 10

உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - அரை ஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

கடுகு - கால் ஸ்பூன்

மல்லி - 2 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு - 1 ஸ்பூன்

கடலை பருப்பு -1 ஸ்பூன்

மிளகு - சிறிதளவு

பச்சரிசி - சிறிதளவு


செய்முறை

முதலில் குழம்புக்கான மசாலா பொடியை தயாரித்து வைத்துக்கொள்வோம். மசாலாவுக்கான பொருட்களில் மிளகாய் வத்தலை தவிர்த்து மற்றவை அனைத்தையும் வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அடுத்து வத்தலையும் தனியாக அதேபோல் வருத்து எடுத்துக்கொள்ளவும். ஆறிய பிறகு அனைத்தையும் மிக்சி ஜாரில் போட்டு பவுடராக அரைத்து எடுக்கவும்.

அடுத்து, துவரம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் 2 முறை நன்கு கழுவி 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். வேக வைக்கும் முன்பு கொஞ்சம் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும். ஒரு ஸ்பூன் அளவுக்கு கடலை எண்ணெய் சேர்த்து 3 விசில் வர அவித்து இறக்கவும்.

அடுத்து, வாய் அகலமான பாத்திரத்தில் வெட்டிவைத்த கிழங்கு வகைகளை சேர்த்து தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு போட்டு வேகவிடவும். 10 முதல் 15 நிமிடம் கழித்து பார்த்தால் பாதி அளவு வெந்திருக்கும். அத்துடன் வெட்டிவைத்த பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் வெட்டிவைத்த காய்கறிகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும். கருவேப்பிலை, கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும். மீண்டும் 10-15 நிமிடம் வேகவிடவும். காய்கறிகள் பாதி வெந்து வந்திருக்கும். அதன்பிறகு கரைத்து வடிகட்டி வைத்த புளி தண்ணீரை சேர்க்கவும். அவித்து வைத்த பருப்பு கலவையையும் காய்கறிகளுடன் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.

அத்துடன் நாம் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள குழம்பு மசாலாவையும் சேர்த்து நன்கு கிளறிவிடவும். கொதி வந்தவுடன் ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்க்கவும். துருவிய தேங்காயையும் சேர்க்கவும்.

கடைசியாக, தேங்காய் எண்ணெய்யில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், சின்ன வெங்காயம், 5 வத்தல், கருவேப்பிலை, காயப்பொடி சேர்த்து தாளித்து அதையும் குழம்புடன் சேர்க்கவும்.

மணமணக்கும் பொங்கல் கதம்ப குழம்பு ரெடி. 20 காய்கறிகள் சேர்ப்பதால் குழம்பு அதிகமாகவே வரும். 2 நாட்கள் சூடு செய்து சாப்பிடலாம். முதல் நாளை விட 2-வது நாள் தான் குழம்பின் ருசி அதிகமாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்