சாலைகளில் திரிந்த 36 மாடுகள் கோசாலையில் அடைப்பு: தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
தூத்துக்குடி மாநகர சாலைகளில் பிடிக்கப்பட்டுள்ள மாடுகளுக்கு ரூ.5 ஆயிரம், கன்னுக்குட்டிகளுக்கு ரூ.2,500-ஐ முதல் கட்டமாக மாநகராட்சிக்கு மாட்டின் உரிமையாளர் செலுத்தி மாடுகளை அழைத்துச் செல்லலாம்.;
தூத்துக்குடி மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் போக்குவரத்து அதிகமுள்ள தெருக்களில் தற்போது கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து தூத்துக்குடி மாநகர சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் விதமாக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மாநகராட்சி மேயர் ஜெகன், மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா ஆகியோர் உத்தரவின்படி மாநகர் நல அலுவலர் சரோஜா மேற்பார்வையில் சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை எட்டயபுரம் ரோடு, பாளையங்கோட்டை ரோடு, திருச்செந்தூர் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் திரிந்த 36 மாடுகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த கால்நடைகள் மாநகராட்சிக்கு சொந்தமான கோசாலையில் அடைக்கப்பட்டது. இதில் மாடுகளுக்கு 5,000 ரூபாயும் கன்னுக்குட்டிகளுக்கு 2,500 ரூபாயும் முதல் கட்டமாக மாநகராட்சிக்கு மாட்டின் உரிமையாளர் பணத்தை செலுத்தி மாடுகளை அழைத்துச் செல்ல வேண்டும். இரண்டாவது முறை அதே மாடு பிடிபட்டால் மாட்டுக்கு 10 ஆயிரம் ரூபாயும் கன்னுக்குட்டிக்கு 5 ஆயிரம் ரூபாயும் மூன்றாவது முறை அதே மாடு பிடிபட்டால் மாடு மாநகராட்சிக்கு சொந்தம் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆகையால் இனி வரும் காலங்களில் சாலைகளில் மாடுகள் திரிந்தால் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோசாலையில் அடைக்கப்பட்டுள்ள மாடுகளை மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு மாடுகளுக்கு உரிய நேரத்தில் உணவு வகைகளை நேரத்துக்கு நேரம் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.