நீலகிரியில் சிவன் கோவிலுக்குள் கரடி புகுந்ததால் பரபரப்பு

கோவிலில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பாட்டிலை கவ்விக்கொண்டு கரடி வனப்பகுதிக்குள் சென்றது.;

Update:2025-11-19 15:50 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் அவ்வப்போது யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைந்து விடுகின்றன. குறிப்பாக உதகையில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அந்த வகையில், நேற்று கரடி ஒன்று உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர். இதற்கிடையில் அந்த கரடி அங்கிருந்த சிவன் கோவிலுக்குள் நுழைந்தது. பின்னர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பாட்டிலை கவ்விக்கொண்டு, கோவில் தடுப்புச் சுவரை தாண்டி வனப்பகுதிக்குள் சென்றது.

இதனை அங்கிருந்தவர்கள் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags:    

மேலும் செய்திகள்