கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி, 31 ஆண்டுகளுக்கு பின் கைது
அசாம் மாநிலம் திப்ருகார் என்ற இடத்தில் குற்றவாளி தலைமறைவாக இருப்பதாக போலீசுக்கு தெரிய வந்தது.;
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 1994-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் இரண்டாவது குற்றவாளி கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை கைது செய்ய வேண்டி இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் அடிப்படையில், அரக்கோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளரால் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்களின் விசாரணையில், அசாம் மாநிலம் திப்ருகார் என்ற இடத்தில் குற்றவாளி தலைமறைவாக இருப்பதாக தெரியவர, அதனடிப்படையில் தனிப்படை போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டு திப்ருகார் சென்று குற்றவாளியை அடையாளம் கண்டு, போலீசார் கைதுசெய்தனர். 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை நேற்று கைது செய்துள்ள போலீசார், அவரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.