அண்ணா பிறந்த நாள்: தூத்துக்குடியில் ஓட்டப் பந்தயம், மிதிவண்டி போட்டிகள்
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டி நாளை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.;
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஓட்டப் பந்தயம், மிதிவண்டிப் போட்டிகள் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மிதிவண்டிப் போட்டி சனிக்கிழமை (செப்டம்பர் 27) மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., தொலைவு இலக்காக வைத்து மிதிவண்டிப் போட்டிகள் நடைபெறும்.
நெடுந்தூர ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) நடைபெற உள்ளது. ஓட்டப் போட்டிகள் 17 முதல் 25 வயது வரையிலான பிரிவு ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. இலக்காக வைத்து ஓட்டப் போட்டிகள் நடைபெற உள்ளன.
மிதிவண்டிப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் சாதாரண மிதிவண்டிகளை கொண்டு வருதல் வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து வயது சான்றிதழ் பெற்று, போட்டி நாளன்று காலை 6 மணிக்கு முன் மாவட்ட விளையாட்டரங்கத்துக்கு வருகை தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.