பொங்கல் பண்டிகை: வீட்டில் பொங்கல் வைக்க நல்ல நேரம்
பொங்கல் தினத்தன்று புதிய பானையில் புது அரிசியிட்டு பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம்.;
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களாலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இயற்கை, சூரிய பகவான், விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழவர்களும், உழவுக் காளைகளுமே இந்தத் திருநாளின் நாயகர்கள்.
சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழா
சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பு என்கிறோம். இதையே மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளை (15.1.2026) கொண்டாடப்படுகின்றது.
வீட்டில் பொங்கல் வைத்து பூஜை செய்பவர்கள், தை முதல் நாளன்று அதிகாலையில் எழுந்து, வாசலில் வண்ண கோலமிட்டும், வீட்டை அலங்கரித்து, வீடுகள் தோறும் தைத்திருநாளை வரவேற்பது வழக்கம். அன்றைய தினம் புதிய பானையில் புது அரிசியிட்டு, பால் பொங்கி வரும் வேளையில் "பொங்கலோ பொங்கல்!" என்று குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சி பொங்க முழக்கமிடுவார்கள். பொங்கலை சூரிய பகவானுக்குப் படைத்து, இப்பூமி செழிக்கக் காரணமான இயற்கைக்கும் கதிரவனுக்கும் நன்றி செலுத்துவார்கள்.
படையல்
இந்த நாளில் சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் என இரண்டு விதமான பொங்கல்கள் வைத்து சிலர் வழிபடுவார்கள். இன்னும் சிலர் பொங்கலுடன், பலவிதமான காய்கறிகள் சேர்த்து சமைத்து படையல் இடுவார்கள். இஞ்சி, மஞ்சள் குலை, கரும்பு, வாழை, தானிய வகைகள் ஆகியவற்றையும் சூரிய பகவானுக்கு படைத்து, விவசாயம் செழிக்க வேண்டிக்கொள்ள வேண்டும்.
சூரிய பொங்கல்
சூரிய பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் காலை 6 மணிக்கு சூரியன் உதயமாவதற்கு முன்பு பொங்கல் வைத்து, சூரியபகவானுக்கு படைத்து வழிபடவேண்டும். இதுவே சூரிய பொங்கல் ஆகும். இதற்கு நல்ல நேரம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. காலை 6 மணிக்கு மேல் பொங்கல் வைத்து வழிபட நினைப்பவர்கள் பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.
பொங்கல் வைக்க நல்ல நேரம்
காலை 7. 45 மணி முதல் 8. 45 மணி வரை
காலை 10.35 முதல் பகல் 1 மணி வரை.