3 வயது சிறுமியை கடத்திய ஆட்டோ டிரைவர் அதிரடி கைது
ஆட்டோ டிரைவர் தப்பி ஓடியதில் கால் முறிந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
நாகர்கோவில்,
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சன் (வயது 20). பலூன் வியாபாரி. இவரது மனைவி முஸ்கான். இவர்களின் மூத்த மகள் சாராவுக்கு 3 வயது ஆகிறது.
நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் நாகர்கோவில் ரெயில் நிலையம் முன் அமர்ந்து முஸ்கான் தன் கடைசி மகளுக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென முஸ்கான் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சாராவை தூக்கிக்கொண்டு ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஞ்சன் மற்றும் முஸ்கான் குழந்தையை தூக்கிச் சென்ற வாலிபரை துரத்திச் சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் ரெயில் நிலையத்துக்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டார்.
ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் கோட்டார் பெரியநாடார் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான யோகேஷ் குமார் (32) என்பவர் சிறுமியை தூக்கிச் சென்றதை உறுதி செய்தனர். இறச்சகுளம் விஷ்ணுபுரம் காலனியில் உள்ள காட்டு பகுதியில் பதுங்கி இருந்த யோகேஷ் குமாரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். தப்பி ஓடிய போது தவறி விழுந்ததால் அவருடைய கால் முறிந்தது. ஆட்டோவில் இருந்த சிறுமியையும் மீட்டனர்.
விசாரணையில், மதுபோதையில் சிறுமியை கடத்திச் சென்றதாக போலீசாரிடம் யோகேஷ் குமார் கூறியுள்ளார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட பரிசோதனையில், எந்த விதமான பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கும் சிறுமி ஆளாகவில்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.