எட்டயபுரம் அருகே லாரி மீது பஸ் மோதி விபத்து: 2 பேர் உடல் நசுங்கி பலி; 7 பேர் படுகாயம்

எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை சமத்துவபுரம் பகுதியில் அரசு பஸ் வந்துகொண்டிருந்தபோது சாலையோரம் பழுதாகி நின்ற தண்ணீர் லாரி மீது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது.;

Update:2025-11-07 04:30 IST

மதுரையில் இருந்து நேற்று மதியம் 2.35 மணியளவில் குளிர்சாதன அரசு பஸ் ஒன்று திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை மதுரை மாவட்டம் பேரையூர் டி.முத்துலிங்கபுரத்தை சேர்ந்த நல்லுசாமி (வயது 45) என்பவர் ஓட்டினார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த நடராஜன் மகன் ஜெயராமன் (47) என்பவர் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் மொத்தம் 25 பயணிகள் இருந்தனர்.

மாலை 4.30 மணியளவில் மதுரை-தூத்துக்குடி தேசிய நான்கு வழிச்சாலையில் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை சமத்துவபுரம் பகுதியில் பஸ் வந்துகொண்டிருந்தது. அப்போது சாலையோரம் பழுதாகி நின்ற தண்ணீர் லாரி மீது எதிர்பாராதவிதமாக அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பீதியில் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் பஸ் டிரைவர் நல்லுசாமி, பஸ்சில் பயணித்த மும்பை மாட்டுங்கா பகுதியை சேர்ந்த மகேஷ் (31) ஆகியோர் உடல் நசுங்கி உயிருக்கு போராடினார்கள்.

மேலும், மகேசின் மனைவி வினிதா (31), தூத்துக்குடியை சேர்ந்த பால்ராஜ் மகள் டாக்டர் ரேணுகாதேவி (24), விளாத்திகுளத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்திக் (29), காஞ்சீபுரம் படப்பை பகுதியை சேர்ந்த ஜோசப் மகன் ஸ்டாலின் (45), எடப்பாடி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் லோகேஷ்வரன் (33), மதுரை மேலூரை சேர்ந்த ராஜூ மகன் பாண்டியன் (34), கண்டக்டர் ஜெயராமன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட டிரைவர் நல்லுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டாக்டர் ரேணுகாதேவி உள்ளிட்ட 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அறிந்ததும் எட்டயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முருகன் தலைமையிலான போலீசார், கோவில்பட்டி தீயணைப்பு அதிகாரி மலையாண்டி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் விபத்தில் சிக்கிய வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இதனால் அந்த சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் அருப்புக்கோட்டை அருகே தும்பகுண்டு கிராமத்தைச் சேர்ந்த சண்முகராஜ் (38) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காயமின்றி தப்பிய பயணிகளை போலீசார் மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த மகேஷ், மும்பை மாட்டுங்கா பகுதியில் வியாபாரம் செய்து வந்தார். இவர் தனது மனைவி வினிதா என்பவருடன் பஸ்சில் திருச்செந்தூர் சென்று கொண்டிருந்த நிலையில்தான் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கணவரை பறிகொடுத்த வினிதா கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்