மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் காயம்

விபத்தில் 2 பேருந்துகளின் முன்பகுதியும் நொறுங்கி பலத்த சேதம் அடைந்தன.;

Update:2025-12-07 15:50 IST

மன்னார்குடி,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கடந்த மாதம் (நவம்பர்) 24-ந் தேதி 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 7 பயணிகள் உடல் நசுங்கி இறந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து கடந்த 31-ம் தேதி காரைக்குடி அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோட்டூர் பகுதியில் உள்ள வளைவில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தும், மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு வந்த தனியார் பேருந்தும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதி கொண்டன.

இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு திருத்துறைப்பூண்டி, திருவாரூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 பேருந்துகளின் முன்பகுதியும் நொறுங்கி பலத்த சேதம் அடைந்தன. குறிப்பாக இரு பேருந்துகளின் பக்கவாட்டு பகுதிகளும் சிதைந்து அவற்றின் ஓரம் இருந்த பயணிகள் காயமடைந்தனர்.

 

இந்த விபத்து குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பேருந்துகள் அடுத்தடுத்த நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்