பா.ம.க.வை உடைக்க சதி: ஜி.கே.மணி மீது அன்புமணி தரப்பு குற்றச்சாட்டு

அன்புமணி ராமதாசிடம் இருந்து பா.ம.க.வை பறிக்க முடியாது என வக்கீல் பாலு தெரிவித்தார்;

Update:2025-12-07 07:10 IST

சென்னை,

பா.ம.க. செய்தி தொடர்பாளர் (அன்புமணி தரப்பு) வக்கீல் பாலு, சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,

கட்சியில் அதிக அந்தஸ்தை, அதிகாரத்தை சுவைத்தவர் ஜி.கே.மணி. ஆனால் இந்த கட்சியை உடைக்க வேண்டும் என்ற நீண்டகாலத் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். கட்சியை அவரும், அவருடைய மகனும் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இதை செய்கிறார். மிகப்பெரிய சதித்திட்டம் நடந்துள்ளது.தி.மு.க.விடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு கைக்கூலியாக இருந்து அவர்கள் சொல்லும் வேலைகளை செய்து பா.ம.க.வை உடைக்க ஜி.கே.மணி முயற்சிக்கிறார்.

ஏப்ரல் 9-ந்தேதி அரசியல் தலைமைக்குழு கூட்டம் நடந்ததாக ஐகோர்ட்டில் மோசடியாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த முரளிசங்கர், ஜி.கே.மணி மீது புகார் கொடுக்க இருக்கிறோம்.டாக்டர் ராமதாஸ் அவருடைய பிள்ளையை இப்படி நடத்துவது வேதனையாக இருக்கிறது. சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள். இது நியாயமா?. ராமதாஸ் இதை செய்யவில்லை. அவருடைய வயதையும், முதுமையையும் பயன்படுத்தி மற்றவர்கள் சொல்லி இதை செய்ய வைக்கிறார்கள். இதற்கு பிறகும் நாங்கள் எந்த நாகரிகத்தையும் பார்க்கமாட்டோம். பொறுத்து கொள்ளவும் மாட்டோம். ஜி.கே.மணி மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்.எங்கள் பக்கம்தான் நியாயம் இருக்கிறது. டாக்டர் அன்புமணி ராமதாசிடம் இருந்து பா.ம.க.வை பறிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்