தூத்துக்குடியில் பூட்டிய வீட்டில் தம்பதி சடலம்: போலீசார் விசாரணை

கழுகுமலை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன், மனைவி 2 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.;

Update:2025-10-15 13:28 IST

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே முக்கூட்டுமலை சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த பார்த்தசாரதி மகன் சேதுமன்னன் (வயது 62). இவரது மனைவி சின்னத்தாய்(60). துலுக்கன்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் சேதுமன்னன் வேலை பார்த்து வந்துள்ளார். சின்னத்தாய் அவரது ஊரில் உள்ள சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

திருவேங்கடத்தில் வசிக்கும் மகன் வழக்கறிஞர் விவேகானந்தன், நேற்று முன்தினம் அவரது தாயாருக்கு கைப்பேசியில் தொடர்பு கொண்டபோது பதில் ஏதும் இல்லையாம். இதனையடுத்து முக்கூட்டுமலையில் குடியிருந்து வரும் அவரது அக்கா மகன் ரகுவிற்கு விவேகானந்தன் தகவல் தெரிவித்து, அங்கு சென்று பார்க்கச் சொன்னாராம். ரகு அங்கு சென்று கதவை தட்டியபோது திறக்காததால், ரகு கைப்பேசியில் தொடர்பு கொண்டார். அப்போதும் பதில் இல்லையாம்.

இதனையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சேதுமன்னன், சின்னத்தாய் ஆகிய 2 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற கழுகுமலை போலீசார், தம்பதி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விவேகானந்தன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்