ஒரே நாடு ஒரே தேர்தலால் நாடு முன்னேற்ற பாதையில் பயணிக்கும் - பவன் கல்யாண் பேச்சு

கருணாநிதி ஆதரித்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஸ்டாலின் எதிர்ப்பது விந்தையாக உள்ளது என்று பவன் கல்யாண் கூறியுள்ளார்.;

Update:2025-05-26 13:20 IST

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற "ஒரே நாடு ஒரே தேர்தல்" குறித்த கருத்தரங்கில் ஜனசேனா கட்சித் தலைவரும் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கில் பேசிய பவன் கல்யாண் கூறியதாவது:-

தமிழ்நாடு திருவள்ளுவர், பாரதியார், எம்.ஜி.ஆர், வாழ்ந்த பூமி. தமிழகம் சித்தர்களின் பூமி. தமிழ் கடவுள் முருகனின் பூமி. நான் தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கிறேன்; சென்னையில் வளர்ந்திருக்கிறேன். நான் தமிழ்நாட்டை விட்டுப் போனாலும் தமிழ்நாடு என்னை விட்டு விடவில்லை.

தனித்தனியாக தேர்தல் நடத்துவதினால் இந்தியா மிகப்பெரிய பொருட்செலவுகளை சந்தித்து வருகிறது. தேர்தல்களினால் அதிகாரிகள், காவலர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வேலை செய்யும் நிலை உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தலால் நாடு முன்னேற்ற பாதையில் பயணிக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் தேர்தல் செலவுகளை வெகுவாக குறைக்க முடியும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பல பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை ஆதரித்தவர் கருணாநிதி. நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஆதரித்து கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். கருணாநிதி ஆதரித்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஸ்டாலின் எதிர்ப்பது விந்தையாக உள்ளது.

'மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்' என எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் வாக்கு இயந்திரத்தை ஆதரித்து பேசுவார்கள். எதிர்க்கட்சிகள் தோற்றால் வாக்கு இயந்திரத்தில் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்