தேர்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கையை கண்டித்து டெல்லியில் பாமகவினர் போராட்டம் - ராமதாஸ் அறிவிப்பு

தேர்தல் ஆணையம் கட்சியை என்னிடமிருந்து பறித்து அன்புமணிக்கு திருடி கொடுத்துள்ளது என ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.;

Update:2025-11-30 14:43 IST

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நான் 1980-ல் இயக்கம் தொடங்கி இன்று வரை 46 ஆண்டுகள் கட்சி நடத்தி வருகிறேன். கடந்த காலத்தில் சாலை வசதி, மின்சார வசதி இல்லாத நிலையில் வயல் வரப்பில் நடந்து சென்றோம். ராந்தல் விளக்கு பிடித்தும் பல கூட்டங்களில் பேசி 96 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று கட்சி வளர்த்து சமூக நீதியை உயிர் மூச்சு கொள்கையாகக் கொண்டு மக்கள் மேம்பட ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு குரல் கொடுத்தும் போராடியும் வருகிறேன். தமிழ்நாட்டில் வன்னியர்கள் உள்ளிட்ட மிக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடும், அருந்ததியர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடும் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடும் பெற்றுக்கொடுத்தேன். அதன் பின் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடும் பெற்றுக்கொடுத்தேன். ஆனால் இது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்திய அளவில் மத்திய கல்வி நிறுவனங்களின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27 சதவீத இட ஒதுக்கீடு மத்திய மருத்துவ படிப்பில் பட்டியலின பழங்குடியினர் (SC-ST) வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்ததை நாடே அறியும்.

நான் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சிக்கு பேராசிரியர் தீரன் தலைவராக இருந்து செயல்பட்டார். அடுத்து ஜி.கே.மணி 25 ஆண்டு காலம் தலைவராக செயல்பட்டு வந்தார். அடுத்து அன்புமணி தலைவராக விரும்பியதால் சென்னை அடுத்துள்ள திருவேற்காடு (GPN) ஜிபிஎன் பேலஸில் 28.5.2022 அன்று பொதுக்குழுவை கூட்டி தலைவராக தேர்ந்தெடுத்து அறிவித்தேன். ஆனால் அன்புமணி சதி திட்டம் தீட்டி 2023 பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக போலியான ஆவணங்களை டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் கொடுத்து தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக்கொண்டு 2026 வரையில் பதவியில் நீடிப்பதாக தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளது. இது மிகப்பெரிய கண்டனத்துக்குரியது. இது தேர்தல் ஆணையத்தின் மோசடியான துரோக நடவடிக்கை.

தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு உடந்தையாக உள்ளது. அன்புமணி கட்சியை என்னிடமிருந்து சூழ்ச்சியால் பறித்துக் கொண்டது கட்சி திருட்டு செயல். தேர்தல் ஆணையம் கட்சியை என்னிடமிருந்து பறித்து அன்புமணிக்கு திருடி கொடுத்துள்ளது. இப்படி எனது கட்சியை பறித்துக்கொண்டது என் உயிரை பறித்ததாகும். 46 ஆண்டு காலம் உழைத்து போராடிய என்னிடமிருந்து பறித்துக் கொண்டது சொல்ல முடியாத உயிர் பரிபோன செயல் கண்ணீர் வடிக்கிறேன். கலங்கி நிற்கிறேன்.

இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனது கட்சி என்கைக்கு வரும் என நம்பிக்கையோடு இருக்கிறேன். தேர்தல் ஆணையத்தின் மோசடியான கட்சியை திருடி கொடுத்த ஜனநாயக படுகொலையை கண்டித்து நீதிகேட்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 02.12.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் பா.ம.க கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் இன்னாள், முன்னாள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள்.

அடுத்து தேர்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கையை கண்டித்தும், நீதிகேட்டும் புது டெல்லியில் 04.12.2025 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டிலிருந்து பா.ம.க.வினர் போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்கிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்