அடுத்த மாதம் 18-ந்தேதி வேலை நிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே வழங்கிட வலியுறுத்தி அனைத்து தாலுகாவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.;

Update:2025-10-09 06:15 IST

சென்னை,

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 4½ ஆண்டுகளாக அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்களின் சார்பாக ஜாக்டோ-ஜியோ முன்வைத்த கோரிக்கைகளில் சரண் விடுப்பு ஒப்படைப்பு தவிர வேறு எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. எனவே, 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பின்பு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதித் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதம் குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வருகிற 16-ந்தேதி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே வழங்கிட வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்த அனைத்து தாலுகாவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதேபோல, வரும் நவம்பர் 18-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்