’என்னை கொலை செய்ய முயற்சி நடந்தது’ - பாமக எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு புகார்
அன்புமணியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை பாமக எம்.எல்.ஏ., அருள் முன்வைத்துள்ளார்.;
சேலம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுகே வடுகம்பட்டி பகுதியில் பாமக எம்.எல்.ஏ., அருள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட கும்பல், இந்த தாக்குதலில் ஈடுபட்டது. பாமகவில் அன்புமணிக்கும், ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. அருளின் கார் தாக்கப்பட்டு, கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பாமக எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசி இருப்பதாவது;
”துக்க வீட்டில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது சோளக்காட்டிற்குள் மறைந்திருந்தவர்கள் காரை நிறுத்தி எங்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். என்னை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியதில் 6 கார்கள் சேதமடைந்தது. அன்புமணியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.”
இவ்வாறு அவர் கூறினார்.
பாமக எம்.எல்.ஏ. அருள் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.