தூத்துக்குடி: ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய பசு, கன்றினை பத்திரமாக மீட்ட போக்குவரத்து காவலருக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி இரண்டாம் ரெயில்வே கேட்டில் ரெயில் இன்ஜின் வருவதற்காக கேட் போடப்பட்டிருந்தபோது ரெயில் தண்டவாளத்தில் பசுவும், கன்றுக்குட்டியும் திடீரென வந்து கேட்டிற்குள் நின்று கொண்டது.;
தூத்துக்குடி இரண்டாம் ரெயில்வே கேட்டில் கடந்த 7.11.2025 அன்று மாலை ரெயில் இன்ஜின் வருவதற்காக கேட் போடப்பட்டிருந்தது. அப்போது ரெயில் தண்டவாளத்தில் பசு மற்றும் அதன் கன்று குட்டி ஒன்று திடீரென வந்து கேட்டிற்குள் நின்று கொண்டது.
இதனையடுத்து அங்கு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் சுப்பையா, துரிதமாக செயல்பட்டு அந்தப் பசு மற்றும் கன்றினை கேட்டிற்குள் ஓரமாகப் பிடித்து வைத்து ரெயில் இன்ஜின் செல்லும் வரை நிறுத்தி வைத்து பாதுகாத்தார். இதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
மேற்சொன்ன பசு மற்றும் கன்றின் உயிரை காத்த தலைமை காவலரின் மனிதாபிமான செயலை பாராட்டி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேற்று அந்த தலைமை காவலருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.