விஜய் வருகை திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? - ப.சிதம்பரம் பரபரப்பு பேட்டி

தமிழகத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார்.;

Update:2025-12-27 06:30 IST

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் தலைமை தி.மு.க.வுடன் கூட்டணி பேசுவதற்கு குழு அமைத்துள்ளது. அந்த குழு ஏற்கனவே முதல்-அமைச்சருடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தி.மு.க. பேச்சுவார்த்தை குழு அமைத்தவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும். விஜய் வருகை தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்று என்னிடம் கேட்காதீர்கள். எங்களுடைய தலைமை தி.மு.க.வோடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளது அதை நாங்கள் செயல்படுத்துகிறோம்.

தமிழகத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது. உயிருடன் உள்ள 13 பேர் பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல பகுதிகளில் உயிருடன் இருப்பவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 66 லட்சத்து 44 ஆயிரம் பேர் முகவரி இல்லாமல் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறி இருப்பது நம்பும்படியாகவா உள்ளது. எப்படி முகவரி இல்லாமல் இருக்க முடியும்?.

மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள 100 நாள் வேலை திட்டம் தொடர்பான சட்டம், மாநில அரசுக்கு நிதி சுமையை ஏற்படுத்தும். 100 நாள் வேலை திட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்தபோது நாடு முழுவதும் வேலை நடப்பது போன்று அறிவித்திருந்தோம். ஆனால் தற்போது அறிவித்துள்ள திட்டத்தில் பல மாநிலங்களுக்கு வேலையே இருக்காது. தேர்தலில் இந்த திட்டம் தலையாய பிரச்சினையாக பா.ஜனதாவிற்கு உருவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்