‘1 கோடி உயிர்களை காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் எனக்கு நன்றி கூறினார்’ - டிரம்ப் மீண்டும் பேச்சு

நோபல் பரிசை பெறுவதற்கு தன்னை விட தகுதி வாய்ந்த வேறு ஒரு நபர் இருக்க முடியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-10 05:18 IST

வாஷிங்டன்,

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறினார். ஆனால் அவரது பேச்சை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருப்பினும் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், 1 கோடி உயிர்களை காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் தனக்கு நன்றி கூறினார் என்று டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது;-

“பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவுக்கு வந்தபோது, வெளிப்படையான அறிக்கையை வெளியிட்டார். இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 1 கோடி பேரின் உயிர்களை காப்பாற்றியதற்காக அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.

போர்களை தடுத்து நிறுத்தியது குறித்து நான் விளம்பரம் செய்து கொள்ள விரும்பவில்லை. அதே சமயம், போரை வேறு யாரும் தடுத்து நிறுத்தவில்லை. வரலாற்றில் நோபல் பரிசை பெறுவதற்கு என்னை விட தகுதி வாய்ந்த வேறு ஒரு நபர் இருக்க முடியாது என நினைக்கிறேன்.

மக்களுக்கு என்னை பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி. நான் 8 பெரிய போர்களை நிறுத்தியுள்ளேன். அவற்றில் சில போர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தன. இந்தியா-பாகிஸ்தான் போல் சில போர்கள் சமீபத்தில் தொடங்கின. அந்த போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், நான் அவசர உத்தரவுகள் மூலம் போரை நிறுத்தினேன். கோடிக்கணக்கான உயிர்களை நான் காப்பாற்றினேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்