சண்டே ஸ்பெஷல்: ருசியான வெண் பொங்கல் செய்வது எப்படி..?
இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் காலை சாப்பிடும் உணவுகளில் ஒன்றான வெண் பொங்கல் செய்வது எப்படி என்பதை பார்க்கப்போகிறோம்.;
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - ½ கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ¼ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 6 கப்
முந்திரி - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் வாணலி ஒன்றில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி, நன்கு சூடாகியதும் அதில் பச்சரிசி மற்றும் சிறுபருப்பை சேர்த்து 2 நிமிடம் லேசாக வறுக்கவும். வாசனை வரும் வரை வறுத்தால் போதும். கரிந்துவிடக்கூடாது.
அடுத்து ஒரு குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி, அது உருகியதும், சிறிது சிறிதாக வெட்டி வைத்த இஞ்சி துண்டு, சீரகம், பச்சை மிளகாய் (கீறி வைத்தது), மிளகு, காயப்பொடி ஆகியவற்றை அதில் சேர்க்கவும்.
அதன்பிறகு நெய்யில் வறுத்து வைத்த பச்சரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும். 6 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, குக்கரை மூடியால் மூடி 5 விசில் வரும் வரை வேக விடவும். சிறிது நேரம் கழித்து மூடியை திறந்தால், நன்கு குழைந்த நிலையில் வெண் பொங்கல் கிடைக்கும்.
அதன்பிறகு, சிறிய வாணலியில், தாளிக்க ஒரு டேபிள் ஸ்பூன் நெய், சிறிதளவு முந்திரி, கருவேப்பிலை சேர்க்கவும். முந்திரி பொன் நிறமாக மாறியவுடன் அதை வெண் பொங்கலுடன் சேர்த்து கிளறவும். மணமணக்கும் வாசனையுடன் சுவையான வெண் பொங்கல் ரெடி. சட்னி, சாம்பாருடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.