டாஸை வென்றதற்கு நன்றி சொல்லுங்கள் இல்லையெனில்... - அர்ஷ்தீப் சிங்கை கலாய்த்த கோலி
விராட் கோலி - அர்ஷ்தீப் சிங் இணைந்து ஜாலியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்தனர்.;
image courtesy:instagram/_arshdeep.singh__
விசாகப்பட்டினம்,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 47.5 ஓவர்களில் 270 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டி காக் 106 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 271 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா நல்ல அடித்தளம் அமைத்தனர். 61-வது அரைசதம் அடித்த ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து களம் புகுந்த விராட் கோலி நாலாபுறமும் பந்தை விரட்டியடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்தார்.
வெறும் 39.5 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 116 ரன்களுடனும், விராட் கோலி 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருதும், விராட் கோலி தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வென்று இருந்தன.
இந்த போட்டி முடிந்ததும் இந்திய வீரர்களான அர்ஷ்தீப் சிங்கும், விராட் கோலியும் இணைந்து ஜாலியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ செய்தனர்.
அதில், “இலக்கு குறைவாக இருந்தது, இல்லையென்றால் இன்னொரு சதமடித்திருப்பீர்கள்” என அர்ஷ்தீப் சிங் கூறினார்.
அதற்கு விராட் கோலி, “நாம் டாஸை வென்றதற்கு நன்றி சொல்லுங்கள், இல்லையென்றால் பனிப்பொழிவு காரணமாக நீங்கள் பவுலிங்கில் சதமடித்திருப்பீர்கள்” என அர்ஷ்தீப் சிங்கை கலாய்த்தார்.
இந்த வீடியோவை அர்ஷ்தீப் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அதனை மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.