சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் நிச்சயம் அரையிறுதிக்கு வர வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.;
image courtesy: AFP
மும்பை,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இந்த தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆன பாகிஸ்தான் அணி குறித்து இந்திய முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "பாகிஸ்தான் அணி கடந்த 6 - 8 மாதங்களில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக தென் ஆப்பிரிக்க மண்ணில் கவனத்தை ஈர்க்கும் வகையில் விளையாடி இருக்கிறார்கள். காயத்தால் சைம் அயூப் இல்லாதது அவர்களுக்கு இழப்புதான். ஏனெனில் அவர் முக்கியமான வீரர்.
என்றாலும் உள்ளூர் சூழலில் அபாயகரமான அணியாக இருக்கக்கூடிய அளவுக்கு அவர்களிடம் போதுமான திறமைசாலிகள் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் நிச்சயம் அரையிறுதிக்கு வர வேண்டும் என்று சொல்வேன். பாகிஸ்தான் மிக மிக அபாயகரமான அணி. அவர்கள்நாக்-அவுட் சுற்றுக்கு வந்து விட்டால் மற்ற அணிகளுக்கு அவர்கள் இரண்டு மடங்கு அபாயகரமாக மாறி விடுவார்கள்" என்று கூறினார்.