ஐபிஎல்: மும்பை அணி வரலாற்று சாதனை

54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல்: மும்பை அணி வரலாற்று சாதனை
Published on

மும்பை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ்(4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்) 28 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து 216 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி லக்னோ அணி களமிறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றதால், ஐ.பி.எல். வரலாற்றில் மும்பை அணி ருசித்த 150-வது வெற்றி இதுவாகும். இந்த மைல்கல்லை எட்டிய முதல் அணி மும்பை தான். அதிக வெற்றி பட்டியலில் 2-வது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (140 வெற்றி) உள்ளது.

மும்பை அணி முதலில் பேட் செய்து 16 முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. இவற்றில் ஒன்றில் கூட தோற்றதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com