ஐ.பி.எல். வெற்றி இப்போதும் அதற்கு 5 மடங்கு கீழேதான் - விராட் கோலி

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனில் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

பெங்களூரு,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.

இதில் பெங்களூரு அணி நிர்ணயித்த 191 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 184 ரன்னில் அடங்கியது. ஷசாங் சிங்கின் (61 ரன், 30 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) அதிரடி வீணானது. 2 விக்கெட் வீழ்த்திய பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஐ.பி.எல். அறிமுகம் ஆன 2008-ம் ஆண்டில் இருந்து விராட் கோலி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்.சி.பி.) அணிக்காக விளையாடி வருகிறார். ஒவ்வொரு சீசனிலும் கணிசமாக ரன் குவிக்கும் கோலிக்கு முதல் 17 ஆண்டுகளில் ஒரு கோப்பையை கூட வெல்லாதது ஏமாற்றமாக அமைந்தது. இதனால் பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இந்த 18 ஆண்டு கால ஏக்கம் நேற்று முன்தினம் இரவு தணிந்தது. இந்த வெற்றியை ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு விராட் கோலி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

இருப்பினும் ஐ.பி.எல். வெற்றி டெஸ்ட் கிரிக்கெட்டை விட 5 மடங்கு பின்தங்கிதான் உள்ளது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த தருணம் என்னுடைய கெரியரின் மிகவும் சிறந்த தருணங்களில் ஒன்றாக இருக்கும். ஆனால் இப்போதும் நான் ஐ.பி.எல். கோப்பையை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு 5 மடங்கு கீழேதான் மதிப்பிடுவேன். அந்தளவுக்கு நான் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறேன். அதனால் இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் அசத்தினால் உலகில் எங்கே சென்றாலும் அனைவரும் உங்களை நன்றாக விளையாடினீர்கள் என்று பாராட்டுவார்கள். எனவே உலக கிரிக்கெட்டில் நீங்கள் மரியாதையை சம்பாதிக்க விரும்பினால் டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்காக உங்களுடைய இதயத்தையும் உயிரையும் கொடுங்கள். அதைச் செய்தாலே உங்களுக்கு உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான்களிடம் மரியாதை கிடைக்கும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com