சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து அணி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
Image Courtacy: ICCTwitter
Image Courtacy: ICCTwitter
Published on

கராச்சி,

8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது. கராச்சி மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் நிலைத்து நின்று ஆடிய ஆடிய வில் யங் (107) சதம் விளாசி அசத்தினார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழந்தாலும் அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடி சதம் விளாசிய டாம் லாதம் 118 ரன்களும், அரைசதம் கடந்த கிளென் பிலிப்ஸ் 61 ரன்களும் எடுத்தனர். இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ரன்கள் ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவுப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சார்பில் சாத் ஷகீல் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஷகீல் 6 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஸ்வான் 3 ரன்னும், பஹர் ஜமான் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக பாபர் அசாமுடன், சல்மான் ஆஹா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ரன்கள் சேர்த்த சல்மான் ஆஹா 42 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய தயாப் தாஹிர் 1 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் தனது அரை சதத்தை பதிவு செய்தநிலையில், 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக குஷ்டில் ஷாவுடன், ஷாகீன் அப்ரிதி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் குஷ்டில் ஷா தனது அரை சதத்தை பதிவு செய்தார். பின்னர் இந்த ஜோடியில் அப்ரிதி 14 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து குஷ்டில் ஷாவும் 69 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஹாரிஸ் ரவுப் 19 ரன்களும், நசீம் ஷா 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

முடிவில் பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக வில்லியம் ஓ ரூர்கே மற்றும் மிட்செல் சான்ட்னெர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com