ஐ.பி.எல். கோப்பையை வென்ற ஆர்சிபி.. தலைமை பயிற்சியாளர் கூறியது என்ன..?
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனில் பெங்களூரு கோப்பையை வென்றது.;
image courtesy:PTI
பெங்களூரு,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது. பெங்களூரு அணியின் இந்த வரலாற்று வெற்றிக்கு பேட்டிங்கை விட பவுலிங் துறை சிறப்பாக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.
இதன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி நிர்ணயித்த 191 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 184 ரன்னில் அடங்கியது. ஷசாங் சிங்கின் (61 ரன், 30 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) அதிரடி வீணானது. 2 விக்கெட் வீழ்த்திய பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்ட்யா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் பெங்களூரு அணியின் இந்த வெற்றி குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவர் அளித்த பேட்டியில், "இது போன்ற வெற்றிகளைப் பெறுவதற்கு ஏலம்தான் முதல் படியாகும். அங்கே நீங்கள் முடிந்தளவு சரியாக செயல்பட வேண்டும். அங்கே அணி இயக்குனர் மோ போபட் வகுத்த முக்கிய தத்துவம் என்னவெனில் குறிப்பிட்ட பெரிய வீரர் மேலே அதிக பணத்தை செலவிடாமல் நல்ல வீரர்கள் மீது செலவிட வேண்டும் என்பதாகும்.
ஏலத்திற்கு முன்பே நல்ல பந்துவீச்சு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதை நோக்கி நாங்கள் உழைத்தோம். இந்த வெற்றி பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலியின் ஐ.பி.எல். பட்டத்தை வெல்லும் கனவை நிறைவேற்ற உதவியது. ஏலத்தின் முதல் நாளுக்குப் பிறகு, நாங்கள் கொஞ்சம் விமர்சனங்களை எதிர்கொண்டோம் என்பது எனக்குத் தெரியும். மக்கள் நாங்கள் பணத்தை செலவழிப்பதை விட முதலீடு செய்கிறோம் என்று நினைத்தார்கள்.
ஆனால் முதல் நாளில் செயல்படுத்திய திட்டங்கள் 2வது நாளில் சிறந்த மதிப்பைப் பெறுவதற்கு உதவியது. அதன் காரணமாக புவி, குருனால், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட் போன்றவ வீரர்களை எங்களால் வாங்க முடிந்தது அதனால் முதல் நாள் ஏலத்தில் நாங்கள் வகுத்த திட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. அதே போல எங்களுடைய இளம் லெக் ஸ்பின்னர் சூயஸ் சர்மா அற்புதமாக பந்துவீசினார்.
குருனால் ஒரு சிறந்த மேட்ச் வின்னர். குறிப்பாக இறுதிப்போட்டி போன்ற முக்கியமான போட்டிகளில். இந்த இறுதிப்போட்டியில் அவரது ஆட்டம்தான் இரு அணிகளுக்கு இடையிலான வித்தியாசம்" என்று கூறினார்.