டெஸ்ட் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி மாபெரும் வரலாற்று சாதனை

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.;

Update:2025-12-07 16:14 IST

கிறைஸ்ட்சர்ச்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 231 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்னும் எடுத்தன.

64 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 466 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 531 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 176 ரன்களும், டாம் லதாம் 145 ரன்களும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 163.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 457 ரன்கள் அடித்திருந்தபோது, ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. ஜஸ்டின் கிரீவ்ஸ் 202 ரன்களுடனும் (388 பந்து, 19 பவுண்டரி), முதல் அரைசதம் அடித்த கெமார் ரோச் 58 ரன்களுடனும் (233 பந்து, 8 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் 7-வது விக்கெட்டுக்கு 180 ரன்கள் திரட்டி சாதித்தனர். ஆல்-ரவுண்டர் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 457 ரன்கள் குவித்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் 4-வது இன்னிங்சில் 2-வது அதிகபட்ச ரன்களை பதிவு செய்த அணி என்ற மாபெரும் சாதனையை வெஸ்ட் இண்டீஸ் படைத்துள்ளது. இந்த வகையில் இங்கிலாந்து 5 விக்கெட்டுக்கு 654 ரன்கள் (1939-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) எடுத்ததே சாதனையாக நீடிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்