குஜராத்துக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் - டெல்லி கேப்டன் அக்சர் படேல்
குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 97 ரன் எடுத்தார்.;
Image Courtesy:@IPL / @DelhiCapitals / @gujarat_titans
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 39 ரன் எடுத்தார்.
குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் 19.2 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 204 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 97 ரன் எடுத்தார்.
இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது பட்லருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த போட்டியின் தோல்வியைப் பற்றி அதிகம் யோசிக்க மாட்டோம் என டெல்லி கேப்டன் அக்சர் படேல் கூறியுள்ளார். போட்டி நிறைவடைந்த பின்னர் அக்சர் படேல் அளித்த பேட்டியில் கூறியதாவது,
நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். அது தான் இறுதியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. ரன் வேகத்தை அதிகரிக்க முயற்சிக்கும் போதெல்லாம் நிலைத்து நின்று ஆடிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை இழந்தோம். இதனால் எங்களது உத்வேகம் பாதிக்கப்பட்டதுடன் விரும்பியது போல் முடிக்க முடியவில்லை.
கடைசி ஓவரில் இரண்டு, மூன்று பவுண்டரிகள் அடித்து இருந்தால் பவுலிங்கின் போது அவர்களை கட்டுப்படுத்தி இருக்கலாம். நாங்கள் நன்றாக பந்து வீசினோம். பீல்டிங்கில் சற்று நன்றாக செயல்பட்டு இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.
நாங்கள் குறைவான இலக்கை நிர்ணயித்து விட்டோம். தோல்வியைப் பற்றி அதிகம் யோசிக்க மாட்டோம். நாங்கள் இன்னும் என்ன செய்து இருக்க முடியும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த முறை இதே தவறை செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.