கெவின் பீட்டர்சன் மகனுக்கு தனது ஜெர்ஸியை பரிசளித்த விராட் கோலி
கெவின் பீட்டர்சன் மகனுக்கு விராட் கோலி தனது ஜெர்சியை பரிசளித்துள்ளார்.;
Image Courtesy: Instagram - kevinpietersen
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பொதுமக்கள் மட்டுமின்றி பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு ரசிகராக உள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். இந்த தொடரின் வர்ணனையாளர்கள் பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் வீரரான கெவிட் பீட்டர்சன் இடம் பெற்றிருந்தார்.
இங்கிலாந்து தொடரின் போது விராட் கோலி மற்றும் கெவிட் பீட்டர்சன் இருவரும் சந்தித்து பேசினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்நிலையில், கெவின் பீட்டர்சனின் மகனுக்கு விராட் கோலி தனது ஜெர்சியை பரிசளித்துள்ளார்.
இது தொடர்பான தகவலை கெவின் பீட்டர்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வீட்டிற்கு வந்து, டைலன் பீட்டர்சனுக்கு விராட் கோலி அளித்த பரிசை கொடுத்தேன். இது அவருக்கு கையுறை போல பொருந்துகிறது. நன்றி நண்பா என பதிவிட்டுள்ளார்.