இந்திய டி20 அணியில் விராட், ரோகித் இல்லாதது... - தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பேட்டி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் இன்று தொடங்குகிறது.;

Update:2025-12-09 16:24 IST

கட்டாக்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்ற முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா முக்கிய காரணமாக அமைந்தனர். குறிப்பாக விராட் கோலி 2 சதங்கள் உட்பட 302 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்றார்.

இந்நிலையில் இந்திய டி20 அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாதது மகிழ்ச்சி அளிப்பதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் இல்லாமலே இந்த இந்திய அணி சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில்:- “விராட் கோலியும் ரோகித் சர்மாவும் டி20 அணியில் இடம்பெறாதது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனாலும் இது ஒரு சிறந்த இந்திய அணிதான். இதற்காக கூடுதல் திட்டங்கள் எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். இது டி20 கிரிக்கெட். இது பொழுதுபோக்கு வடிவம். நாங்களும் அந்த பாணியிலேயே விளையாட விரும்புகிறோம். வீரர்கள் அழுத்தமின்றி உற்சாகமாக விளையாடி தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி உள்ளேன். அவர் சிறந்த வீரர். உண்மையிலேயே நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர். தனிநபராக அணிக்கு வெற்றியை தேடித்தரக்கூடிய திறமைசாலி. அவரது விக்கெட் எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. அவரது விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்துவோம் என்று நம்புகிறேன்” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்