தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் நிறைவு: விராட், ரோகித் சர்மாவை மீண்டும் களத்தில் எப்போது காணலாம்..?

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகின்றனர்.;

Update:2025-12-07 21:13 IST

image courtesy:PTI

சென்னை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்த தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் மொத்தம் 302 ரன்கள் குவித்து அசத்திய விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தொடர் நிறைவடைந்த நிலையில் இனி சர்வதேச களத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை எப்போது காணலாம்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகின்றனர். சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டனர்.

இதன் காரணமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை மீண்டும் எப்போது இந்திய ஜெர்சியில் காணலாம்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை சர்வதேச களத்தில் எப்போது காணலாம்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்..!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜனவரி 2026) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது.

இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11-ம் தேதி வதோதராவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவர்களை களத்தில் மீண்டும் காணலாம்.

தற்சமயம் அவர்கள் இருக்கும் பார்முக்கு கண்டிப்பாக இந்த தொடரில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்