மகளிர் டி20 தொடர்: வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் ஆக்கிய இங்கிலாந்து
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.;
image courtesy:twitter/@ICC
செல்ம்ஸ்போர்டு,
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் இரு டி20 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹெதர் நைட் 66 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 145 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் ஆக்கியது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 71 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல், எம் அர்லாட், சார்லட் டீன் மற்றும் லின்செ சுமித் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடர் நாயகி மற்றும் ஆட்ட நாயகி விருதைஹேலி மேத்யூஸ் கைப்பற்றினார்.