மாவட்ட செய்திகள்

வாலாஜா அருகே ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர் தப்பி ஓட்டம்

வாலாஜா அருகே ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வாலாஜா,

வாலாஜா தாசில்தார் விஜயகுமார் தலைமையில் வருவாய்த்துறையினர், கனிம வளத்துறையினர் ஆகியோர் நேற்று காலை மணல் கடத்துவதை தடுக்க சென்னை - பெங்களூரு சாலையில் வாலாஜா அடுத்த வாணியன்சத்திரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி சென்னையில் இருந்து வேலூர் நோக்கி வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட மினிலாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் அந்த மினி லாரியில் 50 கிலோ எடையில் 200 மூட்டைகளில் சுமார் 10 டன் ரேஷன் அரிசி இருப்பதும், ரேஷன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது. அதிகாரிகளை பார்த்ததும் மினிலாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அதிகாரிகள் ரேஷன் அரிசியுடன் மினிலாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.