மதுரை,
அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்அமைச்சருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் தொடக்க விழா மதுரையில் வருகிற 30ந்தேதி நடக்கிறது. மதுரை ரிங் ரோடு மைதானத்தில் நடக்கும் இந்த விழாவில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை காமராஜர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உயதகுமார், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது கூறியதாவது:
மதுரை மாநகருக்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை மதுரையில் தொடங்குவது, மற்றொரு பெருமையான விஷயமாக இருக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் வியந்து பாராட்டும் ஒரு விழாவாக இதனை நடத்த வேண்டும். மதுரை பெரியார் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி, யானைக்கல் ஆகிய பகுதிகளில் எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. 30ந்தேதி நடைபெறும் இந்த விழாவை சித்திரை திருவிழா போல் சிறப்பாக கொண்டாட வேண்டும். சித்திரை திருவிழாவிற்கு அனைவரும் குடும்பத்துடன் வருவதுபோல் குடும்பம், குடும்பமாக அணி திரள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைதொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்கு பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த இயக்கம் விரைவில் கலைந்து விடும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அது நடக்காது. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. 100 ஆண்டுகளுக்கு இந்த இயக்கம் நிலைத்து நிற்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.அன்பழகன், காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.