மாவட்ட செய்திகள்

100 சதவீத வெற்றியை பெற வேண்டும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என தி.மு.க. செயற்குழுக்கூட்டத்தில் அமைச்சர்கள் கூறினர்.

விருதுநகர்,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என தி.மு.க. செயற்குழுக்கூட்டத்தில் அமைச்சர்கள் கூறினர்.

செயற்குழு கூட்டம்

விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக்கூட்டம் இந்நகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அவைத் தலைவர்கள் தங்கராஜ், செல்வமணி ஆகியோர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

இந்த கூட்டம் வரவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், அனைத்து நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி இடங்களில் வெற்றி பெற பணிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கவே கூடி உள்ளோம். நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் யூனியன் தலைவர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

தலைவர் மு.க. ஸ்டாலின் அனைவரையும் கண்காணித்து வருகிறார். நாம் குறிப்பிட்ட பகுதியில் வெற்றி பெறவில்லை என்றால் அந்த பகுதியில் நிர்வாகியாக பணியாற்ற வாய்ப்பு கிடைக்காது. நீங்கள் கடுமையாக பணியாற்றி வெற்றியை ஈட்டித் தர வேண்டியது உங்கள் கடமை யாகும்.

அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். வருகிற 12-ந் தேதி முதல்- அமைச்சரும், பிரதமர் மோடியும் இங்கு வர உள்ளனர். அன்றும் நாம் பெருமளவில் மக்களை திரட்டி ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

100 சதவீதம் வெற்றி

கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாட்டில் உள்ள அனைத்து முதல்-அமைச்சர்களுக்கு முதன்மையான முதல்-அமைச்சராக விளங்கி வருகிறார். வட மாநிலங்களிலிருந்து வரும் அரசியல் கட்சித்தலைவர்கள் தி.மு.க.வின்வலுவான அமைப்பு ரீதியான ஏற்பாடுகளை கண்டு வியந்து வருகின்றனர்.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் நாம் 100 சதவீத வெற்றியை பெற்றாக வேண்டும். இதன் மூலம் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் மணிமகுடத்தில் விருதுநகர் மாவட்டம் வைரக்கல்லாக விளங்க வேண்டும். மேலும் உறுப்பினர் சேர்க்கையிலும், பூத் கமிட்டி அமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜன், சொத்துப்பாதுகாப்பு குழு உறுப்பினர் குன்னூர் சீனிவாசன், கோகுலம் தங்கராஜ், மாணவரணி அமைப்பாளர் ராஜகுரு, இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், யூனியன் தலைவர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.