மாவட்ட செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் குடியரசுதின பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்

வேலூர் மாவட்டத்தில் குடியரசுதின பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

வேலூர்,

குடியரசுதின பாதுகாப்பு

இந்திய குடியரசுதின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 10 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 40 இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நகரின் முக்கிய இடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் தங்கியிருக்கிறார்களா என்று சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் வாகன சோதனையும் நடத்தப்படுகிறது.

வாகன சோதனை

காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அங்கு ரெயில் பயணிகள் கொண்டு வரும் பைகள், பொருட்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து வருகிறார்கள். மேலும் ரெயில் நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள கார்களையும் போலீசார் நவீன கருவி மூலம் சோதனை செய்து வருகிறார்கள்.

இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகளின் உடமைகள் சோதனை நடத்தப்படுகிறது.

தமிழக- ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.