மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி தி.மு.க. பிரமுகர் கொலையில் 2 பேர் கைது

தூத்துக்குடி தி.மு.க. பிரமுகர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி பாலதண்டாயுதநகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 49). இவர் தாளமுத்துநகர் மெயின் பஜாரில் தையல் கடை நடத்தி வந்தார். தி.மு.க. கிளை செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கண்ணனின் அண்ணன் பாலசுப்பிரமணியனின் மாமியார் இறந்ததையொட்டி 16-ம் நாள் நிகழ்ச்சி நடந்து உள்ளது.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழில் செய்து வந்த தமிழரசன் மகன் ஜெயேந்திரன் (22), 18 வயது வாலிபர் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று உள்ளனர். இதனை கண்ணன் மற்றும் உறவினர்கள் கண்டித்து உள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் மாலையில் கண்ணனின் மகள், சக பள்ளி மாணவிகளுடன் பள்ளி முடிந்த பிறகு மணிகண்டன் என்பவரின் ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். பாலதண்டாயுதநகர் சக்திவிநாயகர் கோவில் அருகே வந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஜெயேந்திரன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மாணவிகளை வீட்டில் விட்டு விட்டு, ஆட்டோ டிரைவர் மணிகண்டன், கண்ணன் ஆகியோர் சக்தி விநாயகர் கோவில் அருகே நின்று கொண்டு இருந்த 3 பேரையும் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மணிகண்டனிடம், போலீசில் புகார் கொடுக்குமாறு கூறிவிட்டு கண்ணன் சென்று விட்டார். அதன்பேரில், மணிகண்டன் தாளமுத்துநகர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் கண்ணனை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளனர். நேற்று முன்தினம் இரவு கண்ணன் தாளமுத்துநகர் மெயின் பஜாரில் உள்ள தனது கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயேந்திரன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கண்ணனை சரமாரியாக அரிவாள், கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி ஜெயேந்திரன் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

இந்த கொலை சம்பவம் தாளமுத்துநகர் பகுதி வியாபாரிகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நேற்று காலையில் வியாபாரிகள் அனைவரும் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மெயின் பஜாரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கண்ணனின் உறவினர்களும் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதி நேற்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சண்முகையா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் ஜெயேந்திரன், 18 வயது வாலிபர் ஆகிய 2 பேரையும் தாளமுத்துநகர் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த கொலை சம்பவத்தை முன்னிட்டு தாளமுத்துநகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.