மாவட்ட செய்திகள்

புகையிலை பொருட்கள் கடத்தல் 2 வாலிபர்கள் கைது

திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் கடத்தல் 2 வாலிபர்கள் கைது

ரிஷிவந்தியம்

மணலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் நேற்று காலை தேவரடியார்குப்பம் கிராமத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த 2 பைகளை திறந்து பார்த்தபோது அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தை சேர்ந்த சரத்குமார்(வயது30), கார்மேகம்(28) என்பதும் திருவண்ணாமலையில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து இங்குள்ள கடைகளில் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து சரத்குமார், கார்மேகம் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.