மாவட்ட செய்திகள்

வேலூர் சாய்நாதபுரத்தில் பாதைக்கேட்டு போராட்டம் நடத்திய 21 பேர் கைது

வேலூர் சாய்நாதபுரத்தில் பாதைக்கேட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர். அவர்கள் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

வேலூர் சாய்நாதபுரத்தில் பாதைக்கேட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர். அவர்கள் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொதுமக்கள் போராட்டம்

வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள ஒரு வழியை சாஸ்திரி நகர், முருகன்நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையாகவும் இந்த பாதை அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த பாதையை ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அந்தபாதையில் அரிச்சந்திரன் சிலை வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.

இந்தநிலையில் உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சாமி சிலையை அப்புறப்படுத்த சென்றனர். அப்போது அங்கு பொதுமக்கள் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பாதை கேட்டு அ.தி.மு.க. பிரமுகர் பி.எஸ்.பழனி உள்ளிட்ட பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

21 பேர் கைது

இதனை தொடர்ந்து பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் 21 பேரை போலீசார் கைது செய்து அந்தப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் அரிச்சந்திரன் சிலையை அங்கிருந்து அகற்றினர். தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.