மும்பை,
மராட்டியத்துக்கு வர வேண்டிய ரூ.2 ஆயித்து 302 கோடி தொழில் முதலீடு திட்டம் தமிழ்நாட்டுக்கு சென்று விட்டதாக உத்தவ் தாக்கரே கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
தொழில் முதலீடு திட்டம்
மராட்டியத்துக்கு வர வேண்டிய தொழில் முதலீட்டு திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக வேதாந்தா பாக்ஸ்கான், டாடா-ஏர்பஸ், மருந்து பூங்கா ஆகியவை வேறு மாநிலங்களுக்கு சென்றதால் அரசை எதிர்க்கட்சிகள் வசைப்பாடின. இந்தநிலையில் மராட்டியத்துக்கு வர வேண்டிய காலணி தயாரிக்கும் தொழில் முதலீடு திட்டம் தமிழ்நாட்டுக்கு சென்று இருப்பதாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா அந்தாரே வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
யார் பொறுப்பு?
தைவான் நாட்டை சேர்ந்த காலணி தயாரிக்கும் நிறுவனத்தை சேர்ந்த பிரதிநிதிகள் குழுவினர் கடந்த மார்ச் 13-ந் தேதி நமது மாநில தொழில் துறை மந்திரி உதய் சாமந்துடன் சந்திப்பு நடத்தினர். ஆனால் அந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் 17-ந் தேதி தமிழ்நாட்டுடன் ரூ.2 ஆயிரத்து 302 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது. இதற்கு பொறுப்பு யார்?.
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.