மாவட்ட செய்திகள்

294 வார்டு கவுன்சிலர்கள் நாளை மறுநாள் பதவி ஏற்பு

நீலகிரி மாவட்டத்தில் 294 வார்டு கவுன்சிலர்கள் நாளை மறுநாள் மறுநாள்(செவ்வாய்க்கிழமை) பதவி ஏற்கின்றனர். இதையொட்டி கூட்ட அரங்குகளை தயார்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் 294 வார்டு கவுன்சிலர்கள் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) பதவி ஏற்கின்றனர். இதையொட்டி கூட்ட அரங்குகளை தயார்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

294 வார்டு கவுன்சிலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 294 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்கள் முதல் கூட்டம் மற்றும் அவர்கள் பதவியேற்க இருக்கின்றனர். இதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் முதல் கூட்டம் நடைபெறும் கூட்டரங்கத்தை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சுத்தம் செய்யும் பணி

ஊட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நகர்மன்ற கூட்ட அரங்கம் கடந்த 5 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது. அங்கு நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறை பயன்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் அறைகளில் தூசி படிந்து காணப்பட்டது.

நகர்மன்ற கூட்டம் கூட உள்ளதால் உள்பகுதியில் கூட்டரங்கம், அறைகள், கதவுகளுக்கு வர்ணம் தீட்டி பொலிவுபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் பழுதடைந்து காணப்பட்ட விளக்குகள், கதவுகள் சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து 36 உறுப்பினர்கள் அமர்வதற்கு இருக்கைகள், மேஜைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. மேலும் ஒலிபெருக்கி வசதி ஏற்படுத்தப்படுகிறது.

மறைமுக தேர்தல்

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் 15 உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. புதிதாக தேர்வான 294 வார்டு உறுப்பினர்கள் நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளனர். இதனால் அந்தந்த நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள கூட்டரங்கம் தயார் செய்யப்பட்டு உள்ளது.

வருகிற 4-ந் தேதி மறைமுக தேர்தல் நடக்கிறது. இதன் மூலம் நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். கூட்டரங்குகளில் மின்விளக்கு பொருத்தப்பட்டு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.