நெல்லை:
நெல்லை மாநகர கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையின் கீழ் இயங்கிவரும் தனிப்படை போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், பெருமாள்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நயினார் மற்றும் போலீசார் பாளையங்கோட்டை அருகே உள்ள வி.எம்.சத்திரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் வந்த ஒரு லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் 6 யூனிட் செம்மண் இருந்தது தெரியவந்தது. உடனே லாரியில் இருந்த 3 பேர் தப்பி ஓட முயன்றனர். போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 28), நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த சின்னத்துரை (36), கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த மாதவன் (48) ஆகியோர் என்பதும், லாரியில் செம்மண் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சங்கர் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து செம்மண்ணுடன் லாரி, மோட்டார் சைக்கிள், 4 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.