மாவட்ட செய்திகள்

கடனுக்கு பஸ் வாங்கி கொடுத்ததில் தகராறு: தொழில் அதிபரை கொல்ல முயன்றவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு

கடனுக்கு பஸ் வாங்கி கொடுத்ததில் ஏற்பட்ட தகராறில் தொழில் அதிபரை காரை ஏற்றி கொல்ல முயன்றவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சேலம்,

முறைகேடு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தேரடிவீதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 50). தொழில் அதிபர். இவருடைய தங்கை கீதா. இவர்களது குடும்பத்தினருக்கு சேலத்தை சேர்ந்த சில புரோக்கர்கள், கடனுக்கு பஸ் வாங்கி கொடுத்ததில் முறைகேடு செய்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளரை சந்தித்து புகார் தெரிவிக்க பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 2014-ம் ஆண்டு சென்றனர். அஸ்தம்பட்டி பகுதியில் வனத்துறை அதிகாரி வீட்டின் அருகில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு காரில் திருச்செங்கோடு கே.கே.என் ரோடு பகுதியை சேர்ந்த சேகர் (39) மற்றும் ராஜி என்கிற ஏசுராஜ் ஆகிய இருவரும் வந்தனர். பின்னர் அவர்கள் பஸ் உரிமையாளரிடம் எதுவும் தெரிவிக்க வேண்டாம் எனவும், பிரச்சினையை நாம் அனைவரும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர். ஆனால் பாலாஜி தரப்பினர் அதனை ஏற்கவில்லை.

கொலை செய்ய முயற்சி

இதனால் ஆத்திரம் அடைந்த சேகர் திடீரென காரை வேகமாக எடுத்து பாலாஜி மீது மோதி கொலை செய்ய முயன்றார். இந்த விபத்தில் அவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். பின்னர் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசில் பாலாஜி புகார் செய்தார். அதன்பேரில் ராஜி, சேகர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, வழக்கில் தொடர்புடைய ராஜி உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார்.

3 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு சேலம் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, காரை ஏற்றி கொல்ல முயன்ற சேகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கிறிஸ்டல் பபிதா தீர்ப்பு அளித்தார்.