வேலூர்
வேலூர், காட்பாடியில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 120 பெண்கள் உள்பட 322 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. இதையொட்டி வேலூர் மாவட்ட சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிற்சங்க நிர்வாகிகள் பரசுராமன், சிம்புதேவன், சுப்பிரமணி, சேகர், திருப்பதி, பாலகிருஷ்ணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறை நிறுவனத்தை விற்பனை செய்யக்கூடாது, சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளர் சட்ட தொகுப்பை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்த வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைத்து விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
மறியலில் ஈடுபட்ட 322 பேர் கைது
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென அண்ணாசாலையில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்பட 202 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி சென்று வேலப்பாடியில உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோன்று காட்பாடி சித்தூர் பஸ்நிறுத்தத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்து. இதனால் காட்பாடி-திருவலம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை காட்பாடி போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்று திருமண மண்டபத்தில் அடைத்தனர். மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வேலூர், காட்பாடியில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 120 பெண்கள் உள்பட 322 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடியாத்தம்
குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே எல்.பி.எப், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. பீடி, தீப்பெட்டி, கைத்தறி உள்ளிட்ட தொழில்களை பாதுகாத்திட வேண்டும். குடியாத்தம் பகுதியில் மாட்டுவண்டியில் மணல் அள்ள மணல் குவாரி திறக்கவேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது. பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த மறியல் போராட்டத்திற்கு எல்.பி.எப். தொழிற் சங்க பொதுச் செயலாளர் வெ.கலேநேசன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் சரவணன், ஏ.ஐ.டி.யு.சி. பீடி சங்க செயலாளர் சி.சுப்பிரமணி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மறியலில் ஈடுபட்ட 100 பேரை குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, கணபதி, கிருஷ்ணவேணி உள்ளிட்ட போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.