மாவட்ட செய்திகள்

செவிலியர் வீட்டில் 43 பவுன் நகை- ரூ.75 ஆயிரம் திருட்டு

செவிலியர் வீட்டில் 43 பவுன் நகை- ரூ.75 ஆயிரம் திருட்டுபோனது.

ஜெயங்கொண்டம்:

கிராம சுகாதார செவிலியர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசெல்வன். இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இளைய மகள் திருப்பதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். புனிதா கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் புனிதாவிற்கு பணி உயர்விற்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெற உள்ளதையொட்டி கடந்த சனிக்கிழமையன்று தனது கணவருடன் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்று விட்டார். இந்நிலையில் பழனிசெல்வன் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்ட அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து சென்னையில் இருந்த பழனிசெல்வனுக்கு தகவல் தெரிவித்தனர்.

நகைகள்- பணம் திருட்டு

இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பிய பழனிசெல்வன் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உள்ளிட்டவற்றின் கதவுகள் திறந்து கிடந்தன.

மேலும் அடுத்த மாதம் தனது அண்ணனுக்கு நடைபெற உள்ள 60-ம் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்த பணம், நகை மற்றும் மகள்களுக்காக சேர்த்து வைத்த நகை என 43 பவுன் நகைகள் மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் திருட்டுக்கு பயன்படுத்திய பொருட்களை வாளியில் தண்ணீரில் கழுவி விட்டு பூட்டையும் தண்ணீரில் போட்டு சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் மோப்ப நாய் மூலம் துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.