மாவட்ட செய்திகள்

தேர்தலில் 50 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பெண்கள் இயக்கத்தினர் ஊர்வலம்

தேர்தலில் 50 சதவீத இடஒதுக்கீட்டினை பெண்களுக்கு வழங்கக்கோரி, கரூரில் சுவாதி பெண்கள் இயக்கத்தினர் ஊர்வலம் சென்றனர்.

கரூர்,

கரூர் மாவட்ட சுவாதி பெண்கள் இயக்கம் சார்பில் நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரூர் உழவர் சந்தை அருகே அந்த அமைப்பினை சேர்ந்த பெண்கள் திரளானோர் கூடினர். அங்கு நடந்த கூட்டத்தில், பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்வது, வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கான ஊதிய நிர்ணயம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு தலைவர் ஜெயம்மாள் தலைமை தாங்கினார். சுயாட்சி இயக்க அகில இந்திய துணை தலைவர் கிறிஸ்டினாசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் நிர்வாகிகள் ப்ரீத்தி, ஜெயம்மாள், பாக்கியம், மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் இந்த கூட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும், கணவரை இழந்தவர்கள், கைவிடப்பட்டவர்கள், விவகாரத்து ஆன பெண்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும், விவசாயிகளின் பயிர்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து நீண்ட நாட்களாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உடனடியாக அரசு வேலை வழங்கிட வேண்டும், ஒவ்வொரு கட்சிகளும் முன்வந்து பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டினை நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் களில் வழங்கிட வேண்டும், ஓட்டுக்காக பணம் கொடுப்பது கண்டறியப்பட்டால் அந்த வேட்பாளரை உடனடியாக தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை வலியுறுத்தி சுவாதி பெண்கள் அமைப்பினர் கரூர் உழவர் சந்தையிலிருந்து புறப்பட்டு பழைய பைபாஸ் ரோடு, லைட்-அவுஸ் கார்னர், ஜவகர்பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். அப்போது மதுவின் தீமைகள், பெண்கல்வியின் முக்கியத்துவம் உள்ளிட்டவை பற்றி கோஷம் எழுப்பினர்.